மார்த்தண்டம் தேனின் கதை

தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் பல தரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டது கன்னியாகுமரி. நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மாவட்டம் மலையாளம், தமிழ் என இரு மொழிப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டது. அதன் காரணமாக மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஒருவிதமான பண்பாடும் பேச்சு மொழியும் புழக்கத்தில் உள்ளன. அதை நாஞ்சில் நாடு என்கிறார்கள்.

அதேநேரம் அதன் கிழக்குப் பகுதி, முற்றிலும் வேறுபட்ட மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டது. இந்த விளவங்கோட்டுக் கலாச்சாரத்துக்கு உட்பட்ட ஒரு பகுதிதான் மார்த்தாண்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரான இந்த ஊருக்குப் பல சிறப்புகள் உண்டு. அப்படியான ஒன்று இந்திய சமூக சேவை வரலாறுடன் தொடர்புடையது. ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association-YMCA) என அழைக்கப்படும் கிறிஸ்தவ இளைஞர் சங்கம்தான் இந்தியாவில் அரசுசாரா சமூக சேவை அமைப்புக்கான முதல் அடியை எடுத்து வைத்தது. அந்த அமைப்பின் சேவை தொடங்கிய இடம் மார்த்தாண்டம். ஒய்.எம்.சி.ஏ. சமூகச் செயல்பாட்டின் மற்றொரு சாதனைதான் தேனீ வளர்ப்புத் தொழில்.

நியூட்டன் பெட்டி

 

தேனீ வளர்ப்புத் தொழில் பல்லாயிரம் ஆண்டுப் பழமையானது. இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பே  ஆப்பிரிக்க நாடுகளில் புழக்கத்தில் இருந்த தொழில் இது. ஆனால், நவீனத் தேனீ வளர்ப்பு 19-ம் நூற்றாண்டில்தான் முறைப்படுத்தப்பட்டது. அதே காலகட்டத்திலேயே அந்தத் தொழில் இந்தியாவிலும் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் அஞ்சல் துறையில் பணியாற்றிவந்த டக்ளஸுக்குத் தேனீ வளர்ப்பில் இருந்த ஆர்வம்தான் அதற்குக் காரணம்.

1884-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து தேனீ வளர்ப்புப் பெட்டியைத் தருவித்து சிம்லாவில் அவர் நிறுவியுள்ளார். அவரே தேனீ வளர்ப்புத் தொழில் குறித்து, ‘Hand book of Beekeeping’ என்ற வழிகாட்டி நூலையும் எழுதியுள்ளார். இதற்குப் பிறகு 1907-ல் தேனீ வளர்ப்புத் தொழில் புனேவில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.

அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் பணியாற்றி வந்த அமெரிக்கப் பாதிரியார் நியூட்டன், தேனீ வளர்ப்புக்கான பெட்டியைப் புதிய முறையில் உருவாக்கினார். இது ஒரு வெற்றிகரமான தேனீ வளர்ப்பு உபகரணமாக இன்றும் பயன்பட்டு வருகிறது. பாதிரியாரைக் கவுரவிக்கும் வகையில் அவர் கண்டுபிடித்த பெட்டி அவரது பெயராலேயே ‘நியூட்டன் பெட்டி’ (Newton Box) என்று அழைக்கப்படுகிறது.

ஸ்பென்ஸர் ஹட்ச், ஒய்.எம்.சி.ஏ. மாணவருடன்

இந்தியாவில் தேனீ வளர்ப்புத் தொழிலை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்களில் அவர் முக்கியமானவர். ஜி.கே. கோஸ் என்பவர் எழுதியுள்ள ‘Environmental Pollution’ என்ற புத்தகத்தில் நியூட்டனை ‘இந்தியத் தேனீ வளர்ப்புத் தொழிலின் தந்தை’ எனக் குறிப்பிடுகிறார்.

தேனீ வளர்ப்புப் பயிற்சி

அதற்குப் பிறகு தென்னிந்தியாவின் சில பகுதிகளில், தேனீ வளர்ப்பு வேளாண்மை சார்ந்த ஒரு தொழிலாகத் தொடங்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் கிராமப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கத்தில் ஒய்.எம்.சி.ஏ. பல திட்டங்களை வகுத்தது. அவற்றுள் ஒன்று ‘மார்த்தாண்டம் திட்டம்’. இந்த மார்த்தாண்டம் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு  ஸ்பென்ஸர் ஹட்ஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

யேல் பல்கலைக்கழகத்தில் கிராமப் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ஸ்பென்சர், அதற்காகப் பல வழிமுறைகளைக் கையாண்டார். கோழி வளர்ப்பு, முந்திரி விவசாயம் ஆகியவற்றுடன் அப்போது வெற்றியடைந்திருந்த தேனீ வளர்ப்பையும் 1924-ம் ஆண்டில் அவர் முயன்று பார்த்தார். அதில் வெற்றியடைந்தார்.

மற்ற பகுதிகளின் தேன் உற்பத்தியைவிட மார்த்தாண்டம் பகுதியின் தேன் உற்பத்தி அதிகமாக இருந்திருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ள அதன் நில அமைப்பு, அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இதனால் மற்ற தொழில்களுடன் தேனீ வளர்ப்புத் தொழிலையும் அவர் அதிகம் ஊக்கப்படுத்தினார்.

இதற்காக மார்த்தாண்டத்தில் தனித் தொழிற்கூடம் தொடங்கப்பட்டு தேக்கு மரப் பலகையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இப்படித் தேனீ வளர்ப்பு சார்ந்த துணைத் தொழில்களும் அங்கு வளர்ந்தன. இங்கே தயாரிக்கப்பட்ட பெட்டி, தேனீ வளர்ப்புத் தொழிலுக்கு இன்றும் முன்னுதாரணமாக இருக்கிறது.

இந்த வகைப் பெட்டி ‘மார்த்தாண்டம் பெட்டி’ என அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 1926-ல் தேனீ வளர்ப்புத் தொழில் நுட்பங்களைக் கற்றுத் தர ஒய்.எம்.சி.ஏ. சார்பாக ஒரு பயிலகத்தை ஒய்.எம்.சி.ஏ. தொடங்கியது. இந்த 6 வார காலப் பயிற்சி வகுப்பில் சென்னை, கொச்சி, மைசூரூ, மும்பை என இந்தியாவின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் தேனீ வளர்ப்பு நுட்பங்களைக் கற்றறிந்தனர்.

இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளிலிருந்தும் தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேற பலர் மார்த்தாண்டம் வந்துசென்றனர். இந்த நுட்பம் தேனீ வளர்ப்புக்கான மாதிரிப் பாடமாக ஆனது. இந்தப் பயிலகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் பயிற்சிக் காலம் 1939-ல் நான்கு மாதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த முன்னெடுப்புக்குப் பிறகு தொழில் மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கியது. தேனீ வளர்ப்புத் தொழிலில் பலரும் ஈடுபடத் தொடங்கினர்.

30,000 பேரின் வாழ்வாதாரம்

தேன் உற்பத்தி சிறப்பாக நடந்தாலும், அதைச் சந்தைப்படுத்துவது சவாலாக இருந்தது. விற்பனைத் தரகர்களைச் சார்ந்தே இந்தத் தொழில் இருந்தது. இதை முறைப்படுத்தும் நோக்கில், அதில் ஈடுபட்டிருந்த மக்களைத் திரட்டிக் கூட்டுறவுச் சங்கம் அமைக்க ஸ்பென்ஸர் முயன்றார்.

திருவிதாங்கூர் கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின்படி ‘மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்’ 1937, மார்ச் 19-ல் தோற்றுவிக்கப்பட்டது (அன்றைய காலகட்டத்தில் மார்த்தாண்டம் திருவிதாங்கூர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது). இந்தியாவின் பழமையான கூட்டுறவுச் சங்கங்களில் இதுவும் இன்று. தொடக்கத்தில் இந்தச் சங்கம் 25 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. இன்றைக்கு அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

“மார்த்தாண்டம் பகுதியில் சுமார் 3,000 பேர் தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள்” என்கிறார் அதன் முன்னாள் மேலாளரான பி. தாசய்யன். இவர் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்புத் தொழில் குறித்த ஆய்வில் தற்போது ஈடுபட்டுவருகிறார். மற்ற பகுதித் தேனைவிட மார்த்தாண்டம் தேன் மருத்துவக் குணம் மிக்கது என்கிறார் இவர்.

கொசுத் தேனீ, உள்ளதில் தேர்ந்த தேன் தரும் வகை. ஆனால், கொசுத் தேனீக்களைப் பானையில் வைத்துதான் வளர்க்க முடியும். மேலும் அது தரும் தேனின் அளவும் மிகக் குறைவானதே. ஆனால், மார்த்தாண்டத்தில் வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ, மருத்துவக் குணமும் கொண்டது. அதிக அளவில் தேனை உற்பத்தி செய்யக்கூடியதும்கூட.

பழமையான ஒய்.எம்.சி.ஏ. பயிலகத்தில் தேனீ வளர்ப்பு குறித்து தாசய்யன் கற்றுத் தேர்ந்துள்ளார். “கே.டி.பால், யேசுதாசன் இவர்கள்தாம் இந்தப் பகுதியில் தேனீ வளர்ப்புத் தொழில் பரவ முக்கிய காரணகர்த்தாக்கள். ஸ்பென்ஸர் இந்தத் தொழிலைத் தொடங்கிவைத்தார் என்றால், இவர்கள் இருவரும்தான் அதை விரிவடையச் செய்து பரப்பினார்கள் எனலாம்” என்கிறார் தாசய்யன்.

கே.டி.பாலும் யேசுதாசனும் இந்தப் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இன்று மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்பு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30,000 பேருக்கும் வருமானம் தரக்கூடிய தொழிலாக மாறியிருக்கிறது.

தேனீக்கு உதவும் தொழில்

தேனீ வளர்ப்பில் இந்திய அளவில் பிரசித்திபெற்ற ஊராக மார்த்தாண்டம் இருப்பதால், இந்தத் தொழில் சார்ந்த பல உபதொழில்கள் இங்கு உண்டாகி யிருக்கின்றன. ஸ்பென்ஸர் காலகட்டத்தில் இங்கு தொடங்கப்பட்ட தேனீ வளர்ப்புப் பெட்டித் தொழில் இன்றும் இங்கு தொடர்ந்துவருகிறது. இந்தப் பெட்டிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தேனீக்களை விரட்டுவதற்கான புகைக் கருவி (Smoker), தேனைப் பிழியும் இயந்திரம் (Honey extractor) ஆகியவையும் இங்கிருந்து செல்கின்றன.

“தொடக்க காலத்தில் தேனீ வளர்ப்புத் தொழில் மிகப் பெரிய பொருளாதாரப் பலனையெல்லாம் தரவில்லை” என்கிறார் தாசய்யன். உற்பத்திப் பொருளை விற்பதற்கான சந்தையை, பின்னால்தான் கண்டடைய முடிந்தது என்கிறார். இதற்கிடையில் மார்த்தாண்டம் பகுதியில் வேளாண் முறைகளும் மாற்றம் அடைந்தன. முதலில் முந்திரிக் காடுகள் அதிகமாக இருந்த இடத்தில், பின்னால் ரப்பர் மரங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.

கேரளத்தின் கோட்டயத்துக்குப் பிறகு இந்தப் பகுதியே ரப்பர் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் பகுதியில் ஆண்டுக்கு சுமார் 30,000 டன் ரப்பர் விளைகிறது. இது விளவங்கோட்டுப் பகுதியின் முக்கியத் தொழிலாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இந்தத் தொழில் முதன்மை பெற்றுள்ளது. ஆனால், நிலையில்லாத ரப்பர் விலையால், ரப்பர் வேளாண்மை சமீப காலமாகச் சரிவடைந்ததுள்ளது.

தேன் வசந்த காலம்

இருந்தபோதும் ரப்பர் சார்ந்த தொழில்கள் இங்கு உருவாகியுள்ளன. ரப்பர் பேண்ட் உற்பத்தித் தொழிற்கூடங்கள் பல  உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இந்தப் பகுதியிலிருந்து ரப்பர் விற்பனைக்குச் செல்கிறது. மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கையுறை போன்றவையும் இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதியாகின்றன.

இது அல்லாமல் வாகன சக்கரங்களுக்கான ரப்பரும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. சக்கரங்களைத் திரும்பப் பயன்படுத்தும் ‘ரீ ட்ரெட்டிங்’ தொழிலுக்கான ரப்பரும் இங்குத் தயாரிக்கப்படுகிறது.

தனித் தொழிலாக உருவான தேனீ வளர்ப்புத் தொழிலும் இந்த ரப்பர் தொழிலின் ஒரு பகுதியாக இன்று மாறிவிட்டது. இன்று தேன் உற்பத்தி, ரப்பர் தோட்டங்களைச் சார்ந்து நடைபெறுகிறது. ரப்பர் பூக்கும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் தேன் உற்பத்தி அதிக அளவில் இருக்கும்.

இந்த மூன்று மாத உற்பத்தியைக் கொண்டே ஓர் ஆண்டு வருமானத்தைத் தேனீ உற்பத்தியாளர்கள் ஈட்டுகிறார்கள். ரப்பர் பூக்கும் இந்தக் காலம்தான் மார்த்தாண்டம் பகுதியின் வசந்த காலம்.ஸ்பென்ஸர் ஹட்ச், ஒய்.எம்.சி.ஏ. மாணவருடன்பி. தாசய்யன்மார்த்தாண்டத்தில் தொழிற்கூடம் தொடங்கப்பட்டு தேக்கு மரப் பலகையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இப்படித் தேனீ வளர்ப்பு சார்ந்த துணைத் தொழில்களும் அங்கு வளர்ந்தன. இங்கே தயாரிக்கப்பட்ட பெட்டி, ‘மார்த்தாண்டம் பெட்டி’ என அழைக்கப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் நாளிதழ்https://tamil.thehindu.com/general/environment/article25410441.ece

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s